ஏன் முப்பது வெள்ளக்காசு?

ஏன் முப்பது வெள்ளக்காசு?

அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்:
 -மத்தேயு 26 : 14
நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.
 -மத்தேயு 26 : 15
அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.
 -மத்தேயு 27 : 5
  • இந்த வசனங்களில் யூதாஸ் காரியோத்து, இயேசுவை காட்டிக் கொடுப்பதற்காக பிரதான ஆசாரியரிடம் 30 வெள்ளிக்காசை வாங்கினான் எனப் பார்க்கிறோம்.
  • அது 60 ஆக இருந்திருக்கலாம். 
  • இல்லையென்றால் 90 ஆக இருந்திருக்கலாம்.
  • ஆனால் அது ஏன் சரியாக 30 வெள்ளிக்காசு??
  • பைபிளில் (1) தீர்க்கத்தரிசனமாக ஒரு இடத்திலும், (2) மீட்கும் பொருளின் அபராதமாக ஒரு இடத்திலும், (3) குற்றநிவாரணபலியின் பொருத்தனையாக ஒரு இடத்திலும் ஆக 3 இடங்களில் வாசிக்கிறோம்.
  • அது என்னவென்று விரிவாகப் பார்ப்போம். 
(1) இதைக் குறித்து பழைய ஏற்பாட்டில் தீர்க்கத்தரிசனமாக வாசிக்கிறோம்.
உங்கள் பார்வைக்கு நன்றாய்க் கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்.
 -சகரியா 11 : 12
கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.
 -சகரியா 11 : 13
  • அது சரியாக 30 வெள்ளிக்காசாக தான் இருக்க வேண்டும் என்று பழைய ஏற்பாட்டில் தீர்க்கத்தரிசனமாக கொடுக்கப்பட்டுள்ளது. 
  • அதனால் தான் யூதாஸ்காரியோத்து 30 வெள்ளிக்காசை பெற்றுக் கொண்டு அவரைக் காட்டிக் கொடுக்க முற்பட்டான்.
(2) மீட்கும் பொருளின் அபராதம்:
ஒரு மாடு ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது முட்டினதினால் சாவுண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும், அதின் மாம்சம் புசிக்கப்படலாகாது; அப்பொழுது மாட்டின் எஜமான் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்.
 -யாத்திராகமம் 21 : 28 

அபராதம் கொடுக்கும்படி தீர்க்கப்பட்டதானால், அவன் தன் ஜீவனை மீட்கும் பொருளாக விதிக்கப்பட்ட அபராதத்தைக் கொடுக்கக்கடவன்.
 -யாத்திராகமம் 21 : 30

அந்த மாடு ஒரு அடிமையானவனையாவது ஒரு அடிமைப்பெண்ணையாவது முட்டினால், அதற்கு உடையவன் அவர்களுடைய எஜமானுக்கு முப்பது சேக்கல் நிறையான வெள்ளியைக் கொடுக்கக்கடவன்; மாடு கல்லெறியப்படவேண்டும்.
 -யாத்திராகமம் 21 : 32
  • மாடு ஒரு அடிமையை முட்டி கொன்றால்,
  • மாட்டின் உரிமையாளர் (எஜமானர்) பொறுப்பேற்க வேண்டும்.
  • அடிமையின் உரிமையாளருக்கு (அந்த அடிமையை வைத்திருந்தவன்) முப்பது வெள்ளி சேக்கல் கொடுக்க வேண்டும்.
  • இது ஒரு அபராதம் — இழப்பீடு.
  • மாடு கொல்லப்பட வேண்டும். 

அதாவது:

  • குற்றம் செய்தது: மாடு (நாம் - பாவம்)
  • பொறுப்பு ஏற்றவர்: மாட்டின் எஜமானர் (இயேசு)
  • இழப்பீடு பெற்றவர்: அடிமையின் எஜமானர் (பிதா)
  • இழப்பீட்டு தொகை - 30 வெள்ளிக்காசு.

ஆவிக்குரிய ஒப்புமை – இயேசுவின் வழியாக இது எப்படி நிறைவேறியது?

  • அடிமை: பாவத்திற்கு அடிமையான மனிதன் (பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். -யோவான் 8 : 34)
  • மாடு: பாவம்/மரணம்/அறியாமை – மனிதனை அழிக்கின்றது. பாவம் செய்த மாடு கொல்லப்பட வேண்டும் என்பதைப் போல, நமக்கு பதிலாக இயேசு கொல்லப்பட்டார். 
  • அடிமையின் எஜமானர்: பரலோக பிதா, ஏனெனில் மனிதனை படைத்தவர் அவர், (அடிமையின் உரிமையாளர் தேவன்). இழப்பீடு பெற்றுக் கொண்ட அடிமையின் எஜமானரும் அவரே!
  • மாட்டின் எஜமானர் -பாவம் செய்த மனிதன் தண்டனைக்குரியவன். அந்த தண்டனையை ஏற்றுக்கொண்ட இயேசுவானவர். நாம் செய்த பாவங்களுக்காக பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்! பொறுப்பு ஏற்றுக் கொண்ட மாட்டின் எஜமானரும் அவரே!

அடிமையை(பாவத்திற்கு அடிமையான மனிதனை)மீட்க வேண்டுமானால், ஒருவர் அபராதம் செலுத்த வேண்டும்.
அதற்காகவே, இயேசு வந்து:

  • அடிமையாக மாறினார் (பிலிப்பியர் 2:7)
  • 30 வெள்ளிக்காசுக்காக விற்கப்பட்டார் (மத்தேயு 26:15)
  • விலைக்கிரயம் கொடுத்து மீட்டுக்கொள்ளப்பட்டோம். (மத்தேயு 20:28, 1 கொரிந்தியர் 6:20)

 பணம் அடிமையின் எஜமானை சென்றடைந்தது:

  • அந்த காசை பிரதான ஆசாரியர்கள் வாங்க மறுத்ததால் அதை யூதாஸ் தேவாலயத்திலே எறிந்து விட்டு செத்தான் என்று வாசிக்கிறோம். (மத் 27:5)
  • அந்தப் பணம் தேவாலயத்தில் எறிந்து விடப்பட்டது என்று மத்தேயுவிலும், குயவனுக்கென்று(பிதா) கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிடப்பட்டது என்று சகரியாவிலும் காண்கிறோம்.(சகரி 11:13)
(3) குற்றநிவாரணபலியுடன் - தொடர்புடையது:

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: யாதாமொருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை பண்ணியிருந்தால், பொருத்தனை பண்ணப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி கர்த்தருக்கு உரியவர்கள்.
 -லேவியராகமம் 27 : 2 
பெண்பிள்ளையை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.
 -லேவியராகமம் 27 : 4

ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,
 -லேவியராகமம் 5 : 15
  • இங்கு பெண்பிள்ளை என்பது மணவாட்டியாகிய சபையை குறிக்கிறது. 
  • கர்த்தரும் தனது மணவாட்டியாகிய நம்மை, பொருத்தனைப் பண்ணி, 30 வெள்ளி சேக்கல் அபராதம் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவாக, குற்றநிவாரணபலியாக தன்னையே பலியாகி நம்மை கர்த்தருக்கு உரியவர்கள் ஆக்கினார். 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4